விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழருவி, தனது மகன் ஹரி கிருஷ்ணன், உறவினர் பிராகஷ் கார்த்திக் ஆகியோருடன் கும்பகோணத்திலுள்ள உப்புக்காரத் தெரு வழியாகச் சென்றுள்ளார். அப்போது, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது அரிவாளால் வெட்டியும் பாட்டிலால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், உடன் வந்த மகனையும் அவரது உறவினரையும் தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவரையும் விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாடு முழுவதும் மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிவருகின்றனர்.
இதன் ஓர் அங்கமாக பிப்ரவரி 15ஆம் தேதி விசிக சார்பில் நடத்தவிருந்த தேசம் காப்போம் பேரணியை பிப்ரவரி 22ஆம் தேதி நடத்தவுள்ளோம். தஞ்சை பெரிய கோயிலில் நடைபெறுகின்ற குடமுழுக்கு விழாவினை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் தான் நடத்த வேண்டும் என்று விசிகவும் வலியுறுத்துகிறது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த அறிவித்திருப்பது ஒருவகையான அரசப் பயங்கவாத நடவடிக்கையே. தமிழ்நாடு அரசு அந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: '5,8ஆம் வகுப்பு மாணவர்கள் அதே பள்ளியில் பொதுத்தேர்வு எழுதலாம்'