தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே நாச்சியார் கோயிலை அடுத்துள்ள மாத்தூரில், முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனம், எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி சிறுமி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உரிரிழந்தனர். மேலும், இவர்களுடன் பயணித்த இருவர் பலத்த காயமடைந்த நிலையில், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசலைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (27). இவர் தனது மனைவி கௌசல்யா (26), மகள் மகிழினி (1) மற்றும் இவரது மைத்துனியின் மகள் ரித்திகா (5) ஆகியோருடன் நாச்சியார்கோயிலில் உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து, சாமி தரிசனம் செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் மீண்டும் குடவாசல் திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க: "உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் மாநாடு நடத்த முடிவு" - கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு அறிவிப்பு
இந்நிலையில், நாச்சியார் கோயிலை அடுத்து, மாத்தூரில் முன்னால் சென்ற லாரியை தமிழ்ச்செல்வன் முந்த முயன்ற நிலையில், எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர்களின் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், முந்த முயன்ற லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி தமிழ்ச்செல்வன் மற்றும் மைத்துனியின் மகள் ரித்திகா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார் கோவில் போலீசார், விபத்தில் பலத்த காயமடைந்த கௌசல்யா மற்றும் அவரது மகள் மகிழினியை கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நாச்சியார் கோவில் போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம்; நவ.21இல் மாநிலம் தழுவிய போராட்டம் - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு!