தஞ்சாவூர்: கும்பகோணத்தில் காவேரி ஆற்றின் சக்கரப்படித்துறையில் நேற்று (செப். 21) இரவு கட்டடத் தொழிலாளிகளான சௌந்தர்ராஜன் (வயது 43) மற்றும் பாலகுரு (வயது 42) ஆகிய இருவரும் மது அருந்திக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இருவரும் கூடுதல் போதை வேண்டி, போதை மாத்திரையுடன் சானிடைசர் என கருதப்படும் கிருமிநாசினி மருந்தை கலந்து குடித்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இன்று (செப்.22) காலை சக்கரப்படித்துறை காவிரி ஆற்றின் கரை அருகே இருவரும் சடலமாக இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார், இருவரின் உடலைகளையும் கைப்பற்றி உடல்கூராய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள், "இவர்களுடன் வேறு யார் யார் எல்லாம் போதை மாத்திரையுடன் சானிடைசரை கலந்து குடித்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை என்றும் ஆனால் உயிரிழந்தவர்களுடன் மேலும் சிலர் அங்கு மது குடித்ததாகவும்" தகவல் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், கட்டட தொழிலாளர்கள் இருவர் போதைக்காக மாத்திரையுடன் சானிடைசரை கலந்து குடித்து, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதேபோல, கடந்த 2021 ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக மதுபான விற்பனை தடை செய்யப்பட்ட போது, தென்காசி மற்றும் திருச்செந்தூர் பகுதியில் மதுப் பழக்கத்திற்கு அடிமையான 2 மதுப் பிரியர்கள் மதுபானம் கிடைக்காததால், போதைக்காக சானிடைசரை குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சானிடைசர் என்பது கிருமி நாசினியே தவிர அதில் போதையை ஏற்படுத்தும் பொருள் இல்லை, ஆகையால் யாரும் சானிடைசரை குடிக்க வேண்டாம் என்று மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் அவ்வப்போது உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.