தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வருபவர், காட்டுராஜா. இவர் கடந்த 16ஆம் தேதி அன்று மற்ற சக போலீஸ்காரர்களுடன் இணைந்து தஞ்சை மேலவெளி ஊராட்சியில் உள்ள சிங்கப்பெருமாள் குளக் கரைப் பகுதியில் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக TN 49 CJ 8371 என்ற எண் கொண்ட ஒரு சொகுசு கார் வேகமாக வந்துள்ளது. அந்த காரை போலீசார் சைகை செய்து வழிமறித்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், காரை வேகமாக ஓட்டி வந்தவர்கள் அங்கு நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றனர். இதனால் போலீசார் சந்தேகம் அடைந்து, வாகனத்தில் ஏறி அந்த காரை துரத்திச் சென்றுள்ளனர். அதன் பின்னர் சுமார் 1 கி.மீ தூரம் விரட்டிச்சென்று தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே காரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, காரில் இருந்த 2 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் காட்டுராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசி உள்ளனர். பின்னர் அங்கிருந்து காரில் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியபோது போலீசார் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இது குறித்து வீடியோ ஆதாரத்துடன் காட்டுராஜா தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தற்போது அவர் அளித்த அந்தப் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் குடி போதையில் இருந்துள்ளனர் எனவும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் தொடர்ந்து காவலரையும் அவதூறாக, ஆபாசமாகப் பேசிவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தொடர் விசாரணையில், பிரச்னையில் ஈடுபட்டவர்கள் தஞ்சை ரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த காரல் மார்க்ஸ் (வயது 44), தஞ்சை சேவப்ப நாயக்கன்வாரி பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் (44) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். இதையடுத்து போலீசை ஆபாசமாகப் பேசிய 2 போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் போதையில் அந்த நபர்கள் வீடியோவில் பேசியதாவது, "போலீஸ் சொன்னால் நிப்பாட்ட மாட்டீர்களா?'' என போலீசார் கேட்க, ''எங்களுக்கும் ரூல்ஸ் தெரியும், 10 ரூபாய் வாங்கும் செந்தில் பாலாஜியை தெரியாதா. வண்டியை எடுங்கள்'' என்று கூற, ''நான் எவ்வளவு சம்பளம் வாங்குறேன் தெரியுமா'' என்று ஆபாச வார்த்தை சொல்லி திட்டி, ''யூனிபார்மை கழற்றிவிட்டு வா...’’ என்று மீண்டும் மீண்டும் ஆபாசமாகத் திட்டியுள்ளார்.
தற்போது அவர் பேசிய இந்த வீடியோ தஞ்சை பகுதியில் வைரலானது. இந்நிலையில், சட்டத்தைப் பாதுகாக்கும் போலீசாருக்கு இது போன்ற போதை நபர்களால் இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லை என்று பலரும் சமூக வலைதளத்தில் தங்களது கருத்துகளைக் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சியில் பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல்.. தொடரும் உணவு பாதுகாப்புத்துறை வேட்டை!