தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் வேட்பாளர் செந்தமிழன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
”பாஜகவைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் என்பவரை நான் பார்த்ததுக்கூட கிடையாது. அவர் யாரென்றே தெரியாது. ஆனால், அவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச வேண்டும் என்று, எனது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் எஸ்.காமராஜிடம் கேட்டுள்ளார். ஆனால், காமராஜ் நம்பர் தராமல், என்னிடம் வந்து இதைக்கூறினார்.
நான் அதற்கு என்னிடம் கேட்காமல், தரவேண்டாம் என்று கூறிவிட்டேன். இதையடுத்து, என்னுடைய உதவியாளர் ஜனாவிடம் கருப்பு முருகானந்தம் பேசியுள்ளார். ஆனால், அதற்குள் விஷயம் எனக்குத் தெரிந்துவிட்டது. அதில் கன்னியாகுமரியில் கிறிஸ்தவரையும், திருநெல்வேலியில் இஸ்லாமியரையும் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று முருகானந்தம் கூறியதாக எனக்கு தகவல் வந்தது. ஆனால், நான் பாஜகவை சேர்ந்தவர்களிடம் அணுகினேன் என்று கருப்பு முருகானந்தம் பேசியுள்ளார்.
இப்போது கருப்பு முருகானந்தம், ஜனாவிடம் பேசியதை ஒத்துக்கொள்கிறார். பொன். ராதாகிருஷ்ணன் என்னிடம் பேச வேண்டும் என்று கருப்பு முருகானந்தம் நம்பர் கேட்டது உண்மை” என்றார்.