தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டம், பண்டாரவாடையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சிறுபான்மைப் பிரிவு சார்பில், இன்று (ஏப்ரல் 13) மாலை இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நோன்பு திறப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், “மாநில கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில், தங்களால் கால் ஊன்ற முடியாத மாநிலங்களில், தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகளை உடைக்கும் நடவடிக்கையில் இறங்குகின்றன.
ஆனால், அந்தந்த மாநில மக்களின் தேவை அறிந்து போராடுவது மாநில கட்சிகள் தான். பிற மாநிலங்களில் அரசியல் நடத்த வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக, சில விஷயங்களில் தேசியக் கட்சிகள் ஒதுங்கி அல்லது மவுனம் காக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டிற்கான காவிரிப் பிரச்னையில், தேசிய கட்சிகள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டனர். ஆனால், இங்குள்ள மாநில கட்சிகள், தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு களம் இறங்கி போராடின. தேசியக் கட்சிகள் வழுக்கிக் கொண்டு சென்றன. அதே போன்றுதான் பெரியார் அணை பிரச்னை.
இருப்பினும் எல்லாக் காலங்களிலும், மாநிலக் கட்சிகளை அழிக்க முடியாது. அந்தந்த மாநில மக்களின் தேவை அறிந்து முழுமையாக போராடுபவை, மாநிலக் கட்சிகள்தான். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுமையும் இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தீவிரவாத, பயங்கரவாத பாதிப்பு என்ற இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இதனை உலக மக்கள் அனைவரும் மதங்களைக் கடந்த, சகோதரத்துவ மனப்பான்மை உடன் நடந்து கொண்டு, இதில் வெற்றி பெற வேண்டும்” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து நாளை (ஏப்ரல் 14) ஆளும் திமுக அரசு மற்றும் அதன் அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியலை வெளியிட உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய டிடிவி தினகரன், “பொதுமக்களைப் போன்று, நாமும் அதனை நாளை வரை காத்திருந்து பார்ப்போம். என்னென்ன விவரங்கள் வெளிவருகிறது, இதனை தமிழ்நாட்டு அமைச்சர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதனைப் பார்த்து, அது குறித்துப் பேசுவோம்” என்றார்.
இதனையடுத்து பாபநாசம் வட்டம், திருமண்டங்குடி திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முன்பு 130 நாட்களைக் கடந்து கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகைக்காகவும், தங்கள் பெயரில் ஆலை நிர்வாகம் வாங்கிய வங்கி கடனுக்காகவும் போராடி வருவதை தமிழ்நாடு அரசு கண்டு கொள்ளவில்லையே என்ற கேள்விக்கு, “கரும்புக்கான நிலுவைத் தொகையினை பெற்றுத் தருவதாகவும், கரும்பிற்கான விலையை அதிகரித்து தருவதாகவும் அளித்த தேர்தல் வாக்குறுதி என்னவாயிற்று என்றே தெரியவில்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஆட்சியில், விவசாயிகள், கரும்பு விவசாயிகள் பிரச்னை முழுமையாக தீர்க்கப்படும்” என பதில் அளித்தார்.
இதையும் படிங்க: "திமுக கோப்புகள்" - அண்ணாமலை அதிரடி ட்வீட்.. வாட்ச் பில் இடம்பெறுமா..?