தஞ்சாவூர்: தமிழக அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக அடுத்து வர இருக்கும் பேருந்து நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வகையில் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முதற்கட்டமாக புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டத்தை நேற்று (மே 13) மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முதற்கட்டமாக 100 பேருந்துகளில் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும், பின்னர் அனைத்து அரசு பேருந்துகளிலும் இக்கருவி பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் பாக்கி இருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு முதல்கட்டமாக 325 கோடிகளுக்கும், அடுத்தது 200 கோடிகளுக்கும், நிதி ஒதுக்கி அவை வழங்கப்பட்டு விட்டது. இப்போது தமிழ்நாடு முதலமைச்சர் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க ரூபாய் 1200 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வழங்கி உள்ளார்கள். விரைவில் குடும்ப ஓய்வூதியம் பாக்கியில்லாமல் வழங்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கும், தற்போது நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் பேருந்துகள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். இந்த இரண்டாயிரம் பேருந்துகளில் முதல்கட்டமாக வழங்கமான பேருந்துகள் 400 வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 2,300 பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை துவங்கிய போது, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் உள்ள தாழ்தளப் பேருந்துகள் வாங்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி இருந்தார்கள். நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் அது தாமதமாகி இருந்தது.
இப்பொழுது 420 தாழ்தளப் பேருந்துகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு இறுதி செய்யப்படுகின்ற நிலையில் இருக்கின்றது. நீதிமன்றம் வழங்கி இருக்கின்ற அறிவுரைப்படி தாழ்தளப் பேருந்துகள் எண்ணிக்கையை நிர்ணயித்து விரைவிலேயே மற்றப் பேருந்துகளையும் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவிலேயே புதிய பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.கடந்த மாதத்தில் புதி டெல்லியில் பிற மாநிலங்களில் உள்ள போக்குவரத்து துறை அமைச்சர்களும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் பங்கேற்ற கூட்டத்தில் தமிழகத்தில் தான் அரசுப் பேருந்துகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள கிளைகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஓய்வெடுக்கும் அறையில் குளிர்சாதன வசதி செய்து தரப்படும் என்றும், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து அறிவிக்கப்பட்ட பிறகு 40% இருந்து 68 சதவீதமாக பெண்கள் பயணம் செய்கின்றனர்” என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ சந்திரசேகரன், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட போக்குவரத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "செவிலியர்கள் பணி விவகாரத்தில் 'விரக்தியை நோக்கி' செல்கிறது திமுக" - ஓபிஎஸ் விளாசல்!