தஞ்சாவூர்: போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்குப் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் போக்குவரத்துக் கழகங்களுடன், ஜனவரி 3, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை மறுத்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 8ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படாததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதனை அடுத்து, நேற்று (ஜன.9) முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அரசு தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகளை இயக்கி வருகின்றது.
மேலும், இரண்டாவது நாளாக இன்று (ஜன.10) போக்குவரத்து தொழிற்சங்கங்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், கும்பகோணம் புதிய பேருந்து நிலைய நுழைவு வாயிலில், நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக அரசிற்குக் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ததுடன், தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அனைவரையும் கும்பகோணம் டி.எஸ்.பி கீர்த்திவாசன் மேற்பார்வையில், மேற்கு காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார் கைது செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தி தனியார் திருமண மண்டபத்திற்குக் கொண்டு சென்றனர்.
இதற்கிடையே, இப்போராட்டத்தில் பங்கேற்ற, 6 ஆண்டுகளுக்கு முன்பு பணியின் போது விபத்தில் சிக்கி உயிரிழந்த முத்துச்செல்வன் என்ற ஓட்டுநரின் மனைவி வசந்தி, தனக்கு இதுவரை அரசிடம் இருந்து எந்த ஒரு பணப்பலனும் கிடைக்கவில்லை. வாரிசிற்கான வேலைவாய்ப்பு வழங்காததால், நான் இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர்களைப் படிக்க வைக்கவும், வளர்த்தெடுக்கவும் மிகவும் கஷ்டத்தை அனுபவித்து வருகிறேன் என வேதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோட்ட தலைமையகம் முன்பு தொழிற்சங்க வேலை நிறுத்த போராட்டம் எதிரொலியாக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நேற்றைய தினத்தை விட இன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று பேருந்துகள் ஓடுமா? ஓடாதா? என்ற குழப்பத்துடன் இருந்த பொது மக்களுக்கு, பேருந்துகள் ஓடுகிறது என தெரிந்த பிறகு இன்று அரசு பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இதனால், நேற்றைய தினம் பேருந்தின் இருக்கைகள் காலியாக சென்ற நிலையில், இன்று பேருந்துகளில் எப்போதும் போலப் பயணிகளுடன் பேருந்துகள் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தஞ்சையில் குறைந்த அளவில் பேருந்து இயக்கம்.. படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்!