கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டம் வீரடிப்பட்டி பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணிபுரியும் கண்காணிப்பாளர் அரங்கசாமி (42), விற்பனையாளர் சவுந்தரராஜன் (33), ஓட்டுநர் சக்திவேல் (30), ரெங்கராஜ் (24) ஆகிய நால்வரும் திருவோணம் பகுதிகளில், பதுக்கி வைத்து மதுபாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததாக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பதுக்கி வைத்து விற்பனை செய்த மதுபாட்டில்கள் அனைத்தும் காலியாகி உள்ளன. இதனால், நால்வரும் வீரப்பட்டியில் உள்ள மதுபானக் கடையை திறந்து, மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக, சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
இதைக் கண்ட அப்பகுதியினர் இது குறித்து திருவோணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் டேவிட் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதைக் கண்ட ஓட்டுநர் சக்திவேல், ரெங்கராஜ் ஆகிய இருவரும் தப்பிச் சென்றனர்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அரங்கசாமி, சவுந்தரராஜனிடம் விசாரித்தனர். அப்போது, இருவரும், மதுபாட்டில்களை குடோனிற்கு கொண்டுச் செல்ல இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட மதுபானக் கடை மேலளாரை தொடர்பு கொண்டு காவல்துறையினர் கேட்ட போது, மதுபானக் கடையை திறக்க ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை என கூறியுள்ளார்.
பின்னர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், விற்பனைக்காக, மதுபாட்டில்களை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அரங்கசாமி, சவுந்தரராஜன் ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து தப்பியோடிய ஓட்டுநர் சக்திவேல், ரெங்கராஜ் ஆகியோரையும் கைது செய்து, 700 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:கள்ளச்சாராயம் தயாரித்த கணவன் மனைவி கைது