தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தஞ்சை தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தினகரன், தஞ்சையை விட்டு விட்டு தமிழ்நாட்டில் வேறு எதை பற்றியும் சிந்திக்க முடியாது என்று கூறினார். கலை, பண்பாடு உள்ளிட்ட அனைத்திற்கும் முன்னோடியாக விளங்குவது தஞ்சை என்றும், மாமன்னர் ராஜராஜ சோழன் ஆண்ட இந்த மண் முதன் முதலில் தேர்தலை கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.
தற்போது, ஹைட்ரோ கார்பனை எடுத்து டெல்டா மாவட்டத்தை சோமாலியாவாக மாற்ற நினைக்கிறார்கள் என்றும், செழிப்பான நாடாக இருந்த சோமாலியா அமெரிக்காவின் கைக்கூலியாக பொம்மை ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது, அழிவுக்கு உள்ளானதை சுட்டிக்காட்டினார். இந்த ஆட்சியாளர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களை சரியாக வைத்துக்கொண்டால் மட்டும் போதும் என நினைக்கிறார்கள் என்று தெரிவித்த தினகரன், எம்எல்ஏக்கள் தயவால் தான் இந்த ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது என்று சாடினார்.
நடந்து முடிந்த தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும், தேர்தல் தோல்விக்கான காரணம் வெளி வரும் வேளையில் யாரும் சோர்வடைய தேவையில்லை என்றும் கூறினார். நிச்சயம் வரும் காலம் நமக்கு வெற்றியை அளிக்கும் என்றும் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் எனவும் தினகரன் நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.