தஞ்சாவூர்: 2010ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தின் போது சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி முடிக்கப்பட்டு பணி நியமனம் பெற்றவர்கள் தவிர்த்து மீதமுள்ள சுமார் 3 ஆயிரம் பிஎட் பட்டதாரிகள் இன்னும் பணி நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது.
இந்த நியமனங்களில் பணி நியமனம் செய்யப்படாமலிருக்கும் 3 ஆயிரம் பிஎட் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் மற்றும் அனைத்து பட்டதாரிகள் முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சங்க நிர்வாகிகள், "2010ஆம் ஆண்டு நாங்கள் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் பணி நியமனங்கள் வழங்கப்படவில்லை. தற்போது காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமனத்தின் போது எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 20ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மரத்தை வெட்டும்போது நேர்ந்த பரிதாபம்: மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!