தஞ்சாவூர்: மருத்துவக் கல்லூரி சாலை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய செல்வி. இவர் தனது இரண்டு மகன்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்து விட்டு வெளியே வந்து, தான் கொண்டுவந்த மண்ணெண்ணை பாட்டிலை மேலே ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அப்போது மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பிற்காக அங்கிருந்த காவலர்கள் உடனடியாக ஆரோக்கிய செல்வி கையில் வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை கீழே தள்ளிவிட்டு, காவல்துறை வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றனர்.
கந்துவட்டி காரணமாக இவர் தனது மகன்களுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என தெரிகிறது. அவரது மனுவில், கடந்த 27ஆம் தேதி தனது வீட்டுக்குள் புகுந்த கந்துவட்டி கும்பல் அராஜகமாக பொருள்களை சேதப்படுத்தி வீட்டில் உள்ள செல்போன், சிசிடிவி கேமரா போன்றவற்றை எடுத்துச் சென்று விட்டதாகவும், வீட்டில் தாங்கள் வாழ பாதுகாப்பு இல்லை என்றும், தங்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர்கள் வீட்டிலிருந்து திருடிச் சென்ற பொருள்களையும், பணத்தையும் மீட்டு தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க:கந்துவட்டி கொடுமை: டிஜிபி அலுவலகம் முன் தம்பதி தீக்குளிக்க முயற்சி