தஞ்சாவூரில் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்காக அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. 1975ஆம் ஆண்டு திருவாரூரில் தொடக்கப்பள்ளியாக தொடங்கி தஞ்சாவூரில் 1986ஆம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகவும் 2005ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும் 2014ஆம் ஆண்டு முதல், மேல்நிலைப் பள்ளியாகவும் செயல்பட்டுவருகிறது.
இப்பள்ளியில் தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர்.
இங்கு படிக்கும் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் ஐந்தாண்டாக 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். மேலும், மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி கராத்தே, யோகா என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
அதேபோல், தன் உணர்வுகள் மூலம் சாலைகளைக் கடப்பது, கைத்தடிகளைப் பயன்படுத்துவது, யோகா, பாட்டு, நாட்டியம், நாடகம், கைவினைப் பயிற்சி என அவர்கள் செய்ய முடியாத பல பயிற்சிகளும் அளிக்கப்பட்டுவருகின்றன.
இது குறித்து மாணவர்கள் கூறும்போது, தாங்கள் பள்ளிக்கு வருவதால் தன்னைப் போலவே பல நண்பர்கள் கிடைக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்களுடைய நிறை-குறைகளை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது என்றனர்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை மூன்று வயதிலேயே பள்ளிக்கு அனுப்பும்போது, இதுபோன்ற குறைபாடுள்ள குழந்தைகளை அனுப்பத் தயங்குகின்றனர். இதனால் அவர்கள் சமூகத்தைப் பற்றி தெரிந்துகொள்ளாமல், வீட்டிலேயே முடங்கிக் கிடக்கக்கூடிய சூழ்நிலை உருவாகின்றது.
தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 100-க்கு மேற்பட்ட பார்வையற்றோர் உள்ள நிலையில், 50 விழுக்காட்டினரைக் கூட பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் முன்வரவில்லை. இருப்பினும் ஆசிரியர்கள் துண்டுப்பிரசுரம், மாற்றுத்திறனாளிகள் உள்ள வீட்டில் நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, குறைபாடுள்ள மாணவர்கள் தானாக முன்வந்து பள்ளிகளில் படித்து தங்களுடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டும். இதற்காக பெற்றோரும் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பார்வை இன்றியும் திரைப்படங்களுக்கு இசையமைக்க முடியும்!