வீணையிலிருக்கும் தந்திகளை மீட்டும்போது உருவாகும் இசைக் கீற்று, கேட்போரைக் கவலைகள் மறந்து லயிக்கச் செய்யும். இந்த இசைக்கருவியின் நாதத்தைத் தமிழ் இசை வடிவத்தின் பரிணாமம் என்றும் சொல்லலாம்.
இசையுலகில் உன்னத இடம்பெற்றுள்ள இந்த வீணைகள் பிற மாநிலங்களில் செய்யப்பட்டாலும்கூட, தஞ்சாவூர் சரஸ்வதி வீணையின் மரவேலைப்பாடுகளே அதன் சிறப்பை பறைசாற்றும் என்கின்றனர் இசைக்கலைஞர்கள். பிரமிக்கவைக்கும் இதன் கைவேலைப்பாடுகள் என்னென்ன? என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் தஞ்சாவூர் விரைந்தோம்.
ஆடம்பரங்கள் இல்லாத சிறிய அறை, அறைக்கு வெளியே உள்ள முற்றம். இங்குதான் வீணைகள் செதுக்கி வடிவமைக்கப்படுகின்றன. இதற்காக, பண்ருட்டி பலா மரங்கள் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டு, முழுக்க கைகளாலேயே வடிவமைக்கப்படுகின்றன.
தஞ்சாவூர் வீணை
தஞ்சாவூர் மாவட்ட அரண்மனைப் பகுதியில் பானை, தண்டி, யாழி முகம் எனச் சுமாராக 52 இஞ்ச் நீளத்தில் 8 கிலோ எடையுடன் தத்ரூபமான சிற்ப வேலைப்பாடுகளுடன் வீணைகள் வடிவமைக்கப்படுகின்றன. கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த வீணைகளிலேயே இரண்டு வகையுண்டு. அதில் ஒன்று ஏகாந்த வீணை, மற்றொன்று ஒட்டு வீணை.
ஒரே மரத்துண்டில் உருவாக்கப்படுவதை ஏகாந்த வீணை எனவும், ஒரே மரத்துண்டில் பாகங்களைத் தனித்தனியாகச் செய்து ஒன்றாகப் பொருத்தும் வீணையை ஒட்டு வீணை எனவும் பெயரிட்டு வேறுப்படுத்துகின்றனர். இதில் ஒட்டு வீணைதான் முந்தைய கால மாடல் என்கிறார் வீணை வடிவமைப்பாளர் கலியமூர்த்தி.
நாதம் எங்கிருந்து வருகிறது?
வீணையிலிருக்கும் 24 பித்தளைக் கட்டிகள் எழுப்பும் ஸ்வரங்கள், பானையின் மேற்புறத்தில் அமைந்திருக்கும் ஒலித்துளைகள் மூலமாக இசையாக உருவெடுக்கின்றன. ஒருவேளை இந்தப் பித்தளைக் கட்டிகளுக்கு இடையேயான இடைவெளியில் குளறுபடி உண்டானால் ஸ்வரமே மாறிப் போகும் என்கிறார் வீணை வடிவமைப்பாளர் ஒருவர்.
இந்த மாவட்டத்தில் வடிவமைக்கப்படும் வீணைகளுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதனுடைய தனிச்சிறப்புகளால் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும், தெலங்கானா, கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும், லண்டன், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கும் ஆர்டரின்பேரில் வடிவமைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படுகின்றன.
இவை குறைந்தபட்சமாக 20 ஆயிரமாகவும் அதிகபட்சமாக 60 ஆயிரம் ரூபாய்க்கு மேலாகவும் வடிவமைப்புக்கு தகுந்தாற்போல விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.
ஆனால், கரோனா தீநுண்மி தொழிலில் கொஞ்சம் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கும் வீணை தொழிலாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சின்னப்பா, வருங்காலத் தலைமுறையினரில் வீணை செய்யும் ஆர்வமுடைவர்கள் மிகச் சொற்பம் என வருத்தம் தெரிவிக்கிறார்.
தற்போது இந்தத் தொழிலை நம்பி தஞ்சாவூரில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. ஊரடங்கிற்கு முன்னதாக ஒரு மாதத்திற்கு 30 முதல் 40 வீணைகள் வடிவமைத்து நாளொன்றுக்கு ரூபாய் 500 முதல் 1000 வருவாய் ஈட்டியுள்ளனர். ஆனால் தற்போது தொழில் முற்றிலும் முடங்கிப்போனது.
ஆன்லைன் மூலமாக வீணைகளை விற்பனைச் செய்வது, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வடிவமைப்புகளைச் செய்துகொடுப்பது என காலத்தின் போக்குக்குத் தகுந்தமாதிரி இவர்கள் தங்களைத் தகவமைத்துக் கொண்டாலும் இந்தப் பொருளாதார நெருக்கடியால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கைக் கணிசமாகக் குறைந்துள்ளது.
முன்பெல்லாம் வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்து வீணை தயார் செய்துவந்தனர். தற்போது இந்நிலை மாறி வடிவமைப்பாளர்களே முதலீடு செய்து வீணையை வடிவமைத் வருவதாக வேதனைத் தெரிவிக்கின்றனர். வித்தியாசமான வடிவமைப்புகளை இத்தொழிலாளர்கள் அறிமுகப்படுத்தினாலும்கூட இந்த இக்கட்டான காலக்கட்டத்தைச் சமாளிக்க அரசின் உதவி தேவை என்பதே நிதர்சனம்.
இதையும் படிங்க:கண்ணைக் கட்டிக்கொண்டு.இடைவிடாமல் வீணை வாசிக்கும் மாணவி!!