தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது கொரநாட்டுக் கருப்பூர் விநாயகர் கோயில். இந்தக் கோயிலின் உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.
இதையடுத்து, உண்டியலை திருடியவர்களை கண்டிபிடிக்க வலியுறுத்தி கோயில் நிர்வாகத்தினர் தாலுக்கா காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் தாலுக்கா காவல் துறை உதவி ஆய்வாளர் மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான காவலர்கள், திருட்டில் ஈடுபட்டவர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில், முத்தையாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன்(23) நாச்சியார் கோயிலைச் சேர்ந்த பிரபாகரன்(27) ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இருவரும் 10க்கும் மேற்பட்ட கோயில்களில் உண்டியலை உடைத்து திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் காவல் துறையினர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:உண்டியலுடன் மல்லுக்கட்டிய திருடன்: பணம் இல்லாததால் ஏமாற்றம்!