தஞ்சையில் பாஜக உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
’காஷ்மீர் பிரச்சனைக்காக டெல்லியில் திமுக நடத்தக்கூடிய ஆர்ப்பாட்டம் தேவையில்லாதது. இது இந்திய வரலாற்றில் திமுகவை தனிமைப்படுத்தப்படக்கூடிய ஆர்ப்பாட்டமாகவே உள்ளது. அக்கட்சியின் தொண்டர்களே இந்த போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
திமுகவிற்கும் காஷ்மீர் விவகாரத்திற்கும் என்ன தொடர்பு. இவர்கள் அறிவித்த போராட்டத்தினால் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை அவர்கள் உருவாக்கவுள்ளனர். திமுக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுகிறது.
370ஆவது சட்டப்பிரிவு செயல்பட்டபோது மக்களுக்கான குறிப்பாக சிறுபான்மையினருக்கான சலுகைகள் மறுக்கப்பட்டுவந்தன. இந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டு மக்களுக்கான இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட வாய்ப்புகள் அமையும். இவர்களது போராட்டம் இந்திய அரசியலை எந்த வகையிலும் பாதிக்கப்போவதில்லை’ என்றார்.
மேலும், பாகிஸ்தான் ஊடகங்கள் திமுகவின் ஆர்பாட்டங்களை பாராட்டுகிறது என இவர்கள் பெருமைப்படுகிறார்கள் எனில், இவர்களது தேசபக்தியை எவ்வாறு மதிப்பிடுவது என தமிழிசை கேள்வியெழுப்பியுள்ளார்.