தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அகரமாங்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகதாஸ். இவரின் இரண்டாவது மகள் வலங்கைமானில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் பயில கல்விக் கட்டணமாக 20 ஆயிரம் ரூபாயை இவர் செலுத்தாததால், தலைமையாசிரியர் கடந்த இரு நாட்களாகத் திட்டியுள்ளார்.
மேலும் பள்ளி மைதானத்தில் இரண்டு மணி நேரம் முட்டி போடவும் வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி இன்று காலை அரளி விதையை அரைத்துக் குடித்து, வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். மகள் மயங்கிய நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடையந்த அவரின் தாய், உடனடியாக மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பேசிய முருகதாஸ், 'எனது மகள் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நான் கூலித்தொழில் செய்வதால் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வந்தேன். இருப்பினும் தீபாவளிப் பண்டிகையை முடித்துவிட்டு கல்விக் கட்டணம் செலுத்திவிடலாம் என அவரிடம் கூறியிருந்தேன். ஆனால், இன்று காலை யாருக்கும் தெரியாமல் என் மகள் அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார். என் மனைவி அவரைத் தேடிப் பார்த்தபோது வீட்டிலுள்ள அறையில் மயங்கிய நிலையில் உள்ளதைப் பார்த்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மகள் மயங்கி விழுந்த அறையில் கல்வி நிறுவனத்தைப் பற்றி நான்கு பக்க அளவில் கடிதம் எழுதி வைத்துள்ளதைப் பார்த்து அதிர்ந்து போனேன். அந்தக் கடிதத்தைப் பார்த்த பின்தான் பள்ளியில் அவரை முட்டிபோட வைத்து துன்புறுத்தியது தெரியவந்தது' என்று வேதனையுடன் கூறினார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு!