தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாளான ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தை, சதய விழாவாக தமிழ்நாடு அரசு அறிவித்து ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி மாதம் 26ஆம் தேதி சதய நட்சத்திர தினத்தையொட்டி சதய விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கரோனோ தொற்று பாதிப்பைக் கருத்தில்கொண்டு சதய விழாவினை நடப்பாண்டில் மிக எளிமையாக அரசு வழிகாட்டுதல்படி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெரிய கோயிலில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் மகா வாராஹி அம்மனுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி, மஞ்சள், தயிர் உள்ளிட்ட அபிஷேக பொருள்களைக் கொண்டு மகா அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு சதய விழாவிற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சதய விழா குழு நிர்வாகிகள், தஞ்சை பெரிய கோயில் அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.