உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நாளை (பிப்.05) நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு எட்டு கால யாக சாலை பூஜை விக்னேஸ்வர பூஜையுடன் விழா நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக பெருவுடையார், பெரியநாயகி, பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியாக யாக சாலை பந்தல் அமைக்கப்பட்டு, அதில் 22 வேதிகைகளும், 110 குண்டங்கள் அமைக்கப்பட்டு 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, 80 ஓதுவார்கள் திருமுறை, தேவராம் ஓதி யாக சாலை பூஜையை தொடங்கினர்.
இந்த யாக சாலை பூஜையில் நவதானியங்கள், பட்டு வஸ்திரங்கள், பழ வகைகள், 140 வகையான மூலிகைகளை கொண்டு ஐந்தாம் கால யாக பூஜை, ஜபம் ஹோமம், பூர்ணாஹூதி பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக சிவாச்சாரியர்கள் தஞ்சை பெரிய கோயிலில் இருந்து சிறப்பு பூஜை செய்து யாக சாலைக்கு வந்தனர். இந்நிலையில் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் ஐந்து இடங்களில் ஐந்து நாள்களுக்கு இசை, நாட்டியம், ஆடல் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பெரிய கோயில் நந்தி மண்டபம் முன்பு முதல் நாள் நிகழ்ச்சியாக வாய்ப்பாட்டு நாதஸ்வரம், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையும் படிங்க: பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை