தஞ்சாவூர்: திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம், அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோயிலுக்கு சொந்தமான வருவாய் இனங்களை இந்துசமய அறநிலையத்துறை வாயிலாக கேட்டதற்காக, தன்னை ஆதீன பொறுப்பில் இருந்து ஏன் நீக்க கூடாது என்ற ரீதியில், முகாந்திரம் இல்லாத குறிப்பாணை அனுப்பி உள்ளதாக சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், சூரியனார்கோவில் ஆதீன 28வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் கடந்த ஆண்டு 2022 ஜனவரி 3ஆம் தேதி முதல் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இதற்கு முன்னதாக இவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் கட்டளை தம்பிரானாக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், திருவாவடுதுறை ஆதீனத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சுதந்திர செங்கோல் பற்றி தவறான தகவல்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருவதற்கு விளக்கம் கேட்டும், ஆதீனத்தில் குற்ற பின்னணி உடைய நபர்களை தங்க வைத்திருப்பதாகவும் இதன் காரணமாக ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆதீனகர்த்தர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு, திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் சார்பில், சூரியனார்கோயில் ஆதீனகர்த்தர் ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்கு, கடந்த 14ஆம் தேதியிட்ட குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இது நேற்றைய தினம் பதிவு அஞ்சல் மூலம் கிடைக்கப்பட்டதாக சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தார். அப்போது, இந்த புகாருக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை, ஆனால் எனக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பி உள்ளார்கள். இதற்கு எவ்வித பதிலும் நான் தரப்போவது இல்லை.
சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு வருவாய் தரக்கூடிய ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்களை திருவாவடுதுறை ஆதீனத்திடம் கேட்டு இந்துசமய அறநிலையத்துறை சார்பில், முயற்சி எடுத்து வருகிறேன். அதனை தடுப்பதற்காக, இப்படி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதில் எவ்வித முகாந்திரமும் இல்லாததால் நான் இதற்கு எந்த பதிலும் அளிக்க போவதில்லை என்றார். மேலும் சுதந்திர செங்கோல் பற்றி கேட்டதற்கு இதில் நான் எதுவும் கூற விரும்பவில்லை என்று அவர் கூறி மறுத்து விட்டார்.
இதையும் படிங்க: கலைஞர் மகளிர் உரிமை தொகை: நிராகரிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை!