தஞ்சாவூர்: தென்னக பண்பாட்டு மையம் என்பது இந்திய அரசு கலாசாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இது 1986ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த மையத்தின் நோக்கம், கிராமப்புற பாரம்பரிய கலைகளையும் மற்றும் பாரம்பரிய பழங்குடி கலைகளையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் தேவாரப் பயிற்சி, யோகா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் கோடை விழா கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. சுமார் 5 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலங்கானா, கோவா, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்டப் பல மாநிலங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டு, தங்களது மாநில பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.
அதைப்போல் இவ்விழாவின் நிறைவு நாளாக நேற்று (ஜுன் 25) நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள மாநில பாரம்பரிய நடனமான களரிபயட்டு (KalariPayattu) மற்றும் பரதநாட்டியம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் தென்னக பண்பாட்டு மைய இயக்குநர் கோபாலகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் சீனிவாசன் அய்யர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
மேலும் தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. இதில் கர்நாடகா, கேரளா மாநில ஆர்கானிக் பொருட்கள், நாகாலாந்து, அசாம் மாநில அலங்கார டிரை பிளவர்ஸ் (Dry Flowers) மற்றும் அசாம் மாநில புடவை ரகங்கள், தெலங்கானா மாநில ஜீவல்லரி, கர்நாடகா மாநில பிளாக் மெட்டல் (Black Metal) வகைகள், கேரளா மாநில மூங்கிலால் ஆன வீட்டு உபயோகப் பொருட்கள், மற்றும் ஒடிசா மாநில அழகிய பெல் மெட்டல் (Bell Metal) பொருட்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
இக்கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். மேலும் இந்த வளாகத்தில் குழந்தைகளை மகிழ்விக்க தண்ணீர் படகு, இரயில் வண்டி, ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டுகளில் விளையாடினர்.
கோடை விழா தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் மட்டுமல்லாது, திருச்சி BHEL வளாகம், திருச்சி கலைக்காவேரி கவின் கலைக்கல்லூரி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 5 நாட்கள் நடைபெற்ற விழா நிறைவு பெற்றது. இவ்விழாக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து: சகோதரர்கள் இருவர் பலி