கும்பகோணம்: டெல்லியில் வருகிற 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறும் ஜி20 மாநாட்டின் முகப்பில் வைக்க, 10 கோடி ரூபாய் மதிப்பில், 28 அடி உயரத்தில், 18 டன் எடையுடன் கூடிய உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் உள்ள தேவ சேனாதிபதி சிற்பக்கூடத்தில் உருவாக்கப்பட்டது.
இந்த பிரமாண்ட நடராஜர் சிலை, இந்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் குழுவின் தலைமையில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு, ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதான் முன்பு நிறுவப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட சிலையை வடித்த ஸ்தபதிகள்: இச்சிலையை வடித்த தலைமை சிற்பிகளில் ஒருவரான சுவாமிமலை ஸ்ரீகண்ட ஸ்தபதி பேசும்போது, "இது தமிழகத்திற்கும், தமிழக கலைக்கும் கிடைத்த பெருமை. கடைசியாக தான் எங்களுக்கு பெறுமை. இச்சிலை நம் கலையின் பெருமை குறித்து வரும் கால சந்ததியினர் அறிந்து கொள்ளத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மேலும் வழக்கமான ஐம்பொன் உலோகத்தால் இதனை உருவாக்காமல், எட்டு விதமான உலோகங்கள் கொண்டு, நீண்ட நாள் வலுவாக இருப்பதற்காகவும், தேய்மானம் எதுவும் ஏற்படமால் இருப்பதற்காக, இது பிரத்யோகமாக வடிவமைத்தாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரே வார்ப்படத்தில் உருவான, உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலைகளில் ஒன்றான இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலையை கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் உள்ள தேவ சேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகளான தேவ.ராதாகிருஷ்ணன், தேவ.ஸ்ரீ கண்டன், மற்றும் தேவ.சுவாமிநாதன் சகோதரர்கள் உள்ளிட்ட 30 பேர் கொண்ட ஸ்தபதிகள் குழுவினர், கிட்டதட்ட ஆறு மாத கால இடைவிடாத உழைப்பில், இதனை அழகாக வடிவமைத்துள்ளனர்.
உலகின் உயரமான நடராஜர் சிலை: இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலை, 75 சதவீத பணிகள் நிறைவு பெற்று இருந்த நிலையில், இந்திரா காந்தி தேசிய கலை மையத் தலைவரும், பேராசிரியருமான ஆச்சால் பாண்டியா தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் 25ஆம் தேதி கனரக வாகனத்தில் சாலை மார்க்கமாக இது சுவாமிமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புதுடெல்லிக்கு கொண்டு சென்றனர்.
சிலையின் மீதம் இருந்த பணிகளை டெல்லியில் வைத்து மேற்கொள்ள 30 பேர் கொண்ட ஸ்தபதிகள் புதுடெல்லிக்கு சென்று, அந்தச் சிலையை முழுமையாக வடிவமைத்தனர். அதனை தொடர்ந்து இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலை ஜி20 உச்சிமாநாடு நடக்கும் இடத்தின் முகப்பில் நிறுவப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மேலும், பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 28 அடி உயரமும், 21 அடி அகலத்தில், சுமார் 18 டன் எடையில் அமைந்துள்ள இந்த பிரமாண்டமான நடராஜர் சிலை குறித்த பதிவை பிரதமர் மோடி உள்பட, அரசியல் தலைவர்கள் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.