தஞ்சாவூர்: பாபநாசம் தாலுகா, தென்சருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (50), இவரது மனைவி பத்மினி (43). இரண்டு ஆண்டுக்கு முன்னர் பத்மினி தனது கணவருடன் மலேசியாவில் வீட்டு வேலை செய்ய சென்றுள்ளார்.
கணவர் சந்திரசேகரன் குழந்தைகளைக் காண வேண்டி ஓராண்டுக்கு முன்னர் தமிழ்நாடு திரும்பிவிட்டார். தொடர்ந்து பத்மினி மட்டும் மலேசியாவில் தங்கி வேலை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் பத்மினி டிசம்பர் 27ஆம் தேதி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஜபாதன் அரசு மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டதால் உடலில் ஒருபக்கம் முழுவதும் இயங்காமல்போனது.
மருத்துவமனையில் தவிப்பு
கோலாலம்பூர் மருத்துவமனையிலேயே சிகிச்சைப் பெற்றுவந்த பத்மினி மருத்துவச் செலவுக்குக்கூட பணமில்லாமல் யாருடைய உதவியுமின்றி இருந்துள்ளார்.
மலேசியா மதிப்பில் 15 ஆயிரம் வெள்ளி சிகிச்சை கட்டணமாக மருத்துவமனைக்கு கட்ட வேண்டி இருந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் இவரது நிலையை அறிந்து 15 ஆயிரம் வெள்ளியை மருத்துவ கட்டணமாகச் செலுத்தியுள்ளனர். மேலும் 2 ஆயிரம் வெள்ளி மருத்துவ கட்டணமாக கட்ட வேண்டிய நிலை பத்மினிக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சில மாதங்களாக கோலாலம்பூர் அரசு மருத்துவமனையிலேயே சிசிச்சைப் பெற்றுவந்த பத்மினியை அங்குள்ள மருத்துவமனை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். பின்னர் பத்மினி மலேசியாவிலிருந்து பாபநாசத்திலிருந்த கணவரின் உதவியுடன் சொந்த ஊரான பாபநாசம் தென் சருக்கைக்குத் திரும்ப முயற்சித்துள்ளார்.
தமிழ்நாடு வர முயற்சி
தமிழ்நாட்டில் சிசிக்சை எடுக்க முடிவு செய்து அங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் மூலம் விமான டிக்கெட் பெற்று ஏர் இந்தியா விமானம் மூலம் தமிழ்நாடு திரும்பத் தயாராகியுள்ளார். ஆனால், ஏர் இந்தியா நிறுவனம் உடல்நலம் பாதிக்கப்பட்ட பத்மினியை விமானத்தில் ஏற்ற மறுத்துள்ளது.
உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் விமானத்தில் பயணம்செய்ய வேண்டுமானால் மருத்துவரிடம் சான்று கட்டாயம் பெற வேண்டும் என ஏர் இந்தியா விமான அலுவலர்கள் கூறியுள்ளனர். இதையறிந்த கோலாலம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பத்மினியை விமானத்தில் அழைத்துச் செல்லலாம் என்ற பரிந்துரை கடித்தத்தை ஏர் இந்தியா அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளனர். தொடர்ந்து மலேசிய மருத்துவர்கள் பத்மினி இந்தியா செல்ல உதவிட இந்திய தூதரகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உறவினர்களின் ஏக்கம்
கடந்த 10 நாள்களுக்கு முன்னர் பத்மினி உடல்நலம் பாதிக்கப்பட்டு கோலம்பூர் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட்டுள்ளார். தற்போது, அவர் மலேசியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காப்பகத்தின் உதவியுடன் சிசிக்சைப் பெற்றுவருகிறார்.
உற்றார், உறவினர், கணவர், மகன், மகள் என உறவினர்கள் பத்மினியைக் காண சொந்த ஊரான பாபநாசத்தில் தவித்துவருகின்றனர். அதே வேளையில் உணவுக்குக்கூட வழியில்லாமல் காப்பகத்தின் உதவியில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் பத்மினி.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பத்மினியை தமிழ்நாடு கொண்டுவர மத்திய அரசும், தமிழ்நாடு அரசும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும் உதவிட வேண்டுமென பத்மினியின் கணவர் சந்திரசேகரன், அவரது குடும்பத்தினர் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட்-19 எதிரொலி மலேசியாவில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்க மனு!