தஞ்சையில் அமமுக கட்சியின் நிர்வாகி ஒருவரது இல்ல விழாவில் கலந்துகொண்டு பேசிய அமமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, "என்னை கட்சியிலிருந்து நீக்க முடியாது. கட்சியே என்னுடையதுதான். கட்சியை ஆரம்பித்தபோது அதில் நானும் ஒருவன். எந்தக் கட்டத்திலும் நான் யாரையும் நம்பி இல்லை. கொள்கையை மட்டுமே நம்பியுள்ளேன். அமமுக நிர்வாகிகள் வெளியே செல்கிறார்கள், அதற்கு விசாரணை நடத்த வேண்டும் என்று நான் கூறினேன்.
இதற்கு எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள், அழைப்பு விடுத்ததால் நான் இதுவரை எந்தக் கட்சிக்கும் செல்லவில்லை. பாஜகவுக்கு செல்வதாகக் கூறுவது தவறான தகவல்,பாஜக அழைப்புவிடுத்ததாக இருந்தால் அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சசிகலா விரைவில் வெளியே வருவார், வெளியே வந்த பிறகு அவரை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.
ஜெயக்குமார் தவிர எந்த அமைச்சரும் முதலமைச்சரும் அவரைப்பற்றி தவறாகப் பேசியது இல்லை. அவர் வெளியே வந்தால் கட்சிக்கு நல்ல காலம் பிறக்கும். இந்தி மொழி ஒரே மொழி என குரல் எழுப்பிவருகிறார்கள்.
இதற்கு ஆட்சியாளர்கள், ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இதில் கட்சி பேதம் இல்லாமல் செயல்பட வேண்டும். செய்தித் தொடர்பாளர் பட்டியலிலிருந்து நீக்கியதாக இதுவரை எனக்குத் தகவல் வரவில்லை. சசிகலா கொடுத்த பதவி இது யாருக்கு வேண்டுமானாலும் செல்லலாம், வரலாம் இது தலைமை முடிவு செய்யும்" என்றார்.