தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
இதை யாரும் தூண்டவில்லை. தன்னெழுச்சியாக நடைபெறுகிறது. ஆனால், இதை மத்திய அரசு ஏற்கத் தயாராக இல்லை. எனவே, விடுதலைப் போராட்டக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் போல, தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்து வருகிறது.
இதை வலியுறுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் மார்ச் இறுதிக்குள் சமூக நல்லிணக்க மாநாடு நடத்தவுள்ளோம். மேலும், விடுதலைப் போராட்டக் காலத்தில் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு உப்பு சத்தியாகிரக பாதையாத்திரை மேற்கொள்ளப்பட்டது.
அதுபோல, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிராக ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு தரக்கேட்டுக் கொள்கிறோம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படும் போராட்டத்துக்குத் தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக விழிப்புணர்வு கூட்டம் நடத்தினால் கூட வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
இதுபோன்ற அடக்குமுறைகளைத் தமிழக அரசுக் கைவிட வேண்டும். ஜனநாயக உரிமையைப் பறிக்கக் கூடாது. அதேநேரத்தில் மத வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வரும் எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதக்கலவரம் மூலம் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கிறது. குஜராத்தை போல தமிழ்நாட்டையும் மாற்ற பாஜக விரும்புகிறது. இதை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது வருத்தமளிக்கிறது.
கடந்த காலம் போல அணை திறக்கப்படும் நேரத்தில் தூர் வாரும் பணியைத் தொடங்கி முறைகேடு நிகழ்ந்ததைப் போல, இந்த ஆண்டும் இருக்கக் கூடாது” என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஆசை இல்லை: நடிகர் ரஜினிகாந்த்