தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை, மன்னார்குடி மற்றும் திருவாரூரில் இருந்து தவிடு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேற்று (டிச.8) சேலம் ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எண்ணெய் ஆலைகளுக்கு லாரியில் தமிழழகன் என்பவர் சென்றுள்ளார். அப்போது திருவாரூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வரும்போது, திருநரையூர் பகுதியில் தவிடு மூட்டைகள் மீது போடப்பட்ட கயிறு கட்டுகள் நழுவி, சாலையோர மின்கம்பத்தில் உரிசியதில் லாரி நின்றது.
இதனால், அடுத்தடுத்து இருந்த இரு மின் கம்பங்கள் முழுமையாக சேதமடைந்ததோடு, மின் வடங்கள் சாலையில் விழுந்து மின்தடை ஏற்பட்டது.
இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கு காயம் ஏற்படவில்லை. இந்நிலையில், இவ்விபத்து காரணமாக கும்பகோணம்-திருவாரூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டது. இது குறித்து நாச்சியார்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்வாரிய ஊழியர்களும் தற்காலிகமாக மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, அவ்வழியாக நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்ற அரசு தலைமை கொறடா கோவை செழியன், விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டார். மின்வாரிய மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களை தொடர்புகொண்டார். விரைவில் மின் விநியோத்தை சீர்செய்து போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்குப் பின் போக்குவரத்து சீரானதுடன் மின் விநியோகமும் சீரமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஹெல்மெட் அணியாத காவலர்களிடம் முறையாக Fine வசூலிக்கப்படுகிறதா? - அதிர்ச்சித்தகவல்