தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்வதற்கு பள்ளத்தூர் வழியை கடந்துதான் செல்ல வேண்டும். எனவே, அவ்வழியாக செல்லும் இடத்தில் ராஜமடம் பிரிவு சாலையும்-அதிராம்பட்டினம் பிரிவு சாலையும் இணைகின்றது. இந்த பிரிவு சாலைகள் இணையும் இடத்தில் டிரான்ஸ்பார்மர் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த டிரான்ஸ்பார்மர் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்து வருகிறது.
பேருந்துகள் அந்த வழியே செல்லும்பொழுது எதிரே வரும் பைக் அதை கடந்து செல்வது கடினமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். பைக்கில் செல்பவர்கள் டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்துக்குள்ளாகக் கூடிய சூழலும் ஏற்படுகிறது.
இந்நிலையில் இந்த டிரான்ஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பலமுறை வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மின்துறை அலுவலகத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், மின்துறைப்பிரிவு இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
சில வருடங்களுக்கு முன்பு தனியார் பேருந்தில் வந்த ஒரு முதியவர் இந்த முனையில் பேருந்து திரும்பியபோது டிரான்ஸ்பார்மரில் மோதி அதே இடத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, மேலும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க இந்த டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.