தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை தலைநகராகக் கொண்ட புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, அப்பகுதி மக்களிடையே 25 ஆண்டு காலமாக இருந்து வருகிறது. தேர்தல் சமயத்தில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு வாக்குறுதி அளித்த போதும், மாவட்ட கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை.
ஆனால் கும்பகோணத்தை விட சிறிய ஊர்கள் கூட தற்போது மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அடுத்தடுத்து தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மயிலாடுதுறை என ஐந்திற்கும் மேற்பட்ட மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இதுபோன்ற அரசின் அறிவிப்பு இப்பகுதி மக்களிடையே வேதனையினை ஏற்படுத்தியதையடுத்து, மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன.
இந்நிலையில் முதற்கட்டமாக, கும்பகோணத்தில் மாவட்டமாக்க வேண்டி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நினைவூட்டும் வகையில், இரண்டு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் பல்வேறு நாட்களில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், நாச்சியார்கோயில், சோழபுரம் ஆகிய இடங்களில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் அனுப்பப்பட்டன.
இரண்டாம் கட்டமாக இன்று(ஜூலை 10) ஏராளமான பெண்கள் திரண்டு அதன்சுற்று வட்டாரப்பகுதிகளில் மாக்கோலம், வண்ணகோலம், பல்வேறு விதமான வண்ண மலர்களை கொண்டு கோலமிட்டும் தமிழ்நாடு அரசை நூதன முறையில் வலியுறுத்தினர்.
மேலும் குறிப்பாக, திருநரையூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பும், ஆயிகுளம் சாலையிலும் பெரிய அளவில் இக்கோலங்கள் இடப்பட்டன. அடுத்த கட்டமாக எதிர்வரும் 15ம் தேதி புதன்கிழமை காமராஜர் பிறந்தநாள் அன்று கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், ஆகிய பகுதிகளில் கும்பகோணத்தை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டமும், அதன் பிறகு 17ம் தேதி வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.