தஞ்சாவூரில் இடதுசாரி சிந்தனையாளர் வைகறைவாணன் அகவை 74 வாழ்க்கை படிப்பினை மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "வள்ளுவர் காலத்தில் இருந்து மனிதர்களுக்கிடையே எந்த வேறுபாடும் இல்லை என்ற கருத்தோட்டம் கொண்ட தமிழர் பண்பாடு, இன்றைக்கு முற்றிலுமாக சீரழிந்து விட்டதோ என்ற ஐயப்பாடு எழாமல் இல்லை. எந்த உயிர்கள் ஆனாலும் சரி அந்த உயிர்களுக்கு பிறப்பினால் வேற்றுமை கிடையாது என்ற உயர்ந்த ஒரு சிந்தனையை வெளிப்படுத்தியவர் வள்ளுவர். வள்ளுவர் வழியில் வந்த நாம் என்று பெருமை பேசுகிறோம்.
மாணவர்களின் பிஞ்சு உள்ளங்களிலே நஞ்சு கலக்கப்பட்டு புத்தகத்தை எடுத்து படிக்க வேண்டிய கைகளிலே அரிவாளை தூக்கிக் கொண்டு போய் சக மாணவனை வெட்டுகிற கொடுமை இன்று தமிழ்நாட்டில் நடக்கிறது என்று சொன்னால் இத்தனை ஆண்டு காலமாக வள்ளுவர் காலத்திலிருந்து பெரியார் காலம் வரை சாதிக்கு எதிராக, சாதிய வேறுபாடுகளுக்கு எதிராக, மனிதர்களுக்கிடையே வேற்றுமைக்கு எதிராக, எத்தனை அறிஞர் பெருமக்கள் எடுத்துரைத்த அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர் தானா.
வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக உத்தர பிரதேசத்தில் அங்கு நடத்தப்படுகின்ற ஆட்சி காட்டாட்சியாக மாறி, முஸ்லிம் சமுதாயத்தினரின் வீடுகளில் முன்னறிவிப்பு கூட இல்லாமல், சட்டத்திற்கு புறம்பாக புல்டோசர் மூலம் வீடுகளை இடித்து தள்ளிய காட்டாட்சி நடக்கிறது. இந்த காட்டாட்சிக்கு நாம் இந்த தடவை முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் பிறகு எதிர்காலத்தில் இந்த நாட்டின் ஜனநாயகம் இருக்குமா? என்பதே கேள்வி" என்று ஆவேசாமாக பேசினார்.
முன்னதாக குயில் கூட்டம் சார்பில் தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் வைகறைவாணன் அகவை 74 வாழ்க்கை படிப்பினை மலரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட முனைவர் கம்பன் கனகசபை, ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, முனைவர் குணசேகரன், விவேகானந்தன், கலைவாணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மலரை அறிமுகம் செய்து முனைவர்கள் திருமாறன், இளமுருகன், மதிவாணன் ஆகியோர் உரையாற்றினார்கள். பின் நிகழ்வில் இலக்கிய ஆர்வலர், தனித்தமிழ் பற்றாளர், திருவையாறு கல்லூரியில் புலவர் படிப்பு படித்திருந்தாலும் பணிக்கு செல்லாது சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் இடதுசாரி கொள்கையுடன், தமிழ் தேசிய நிலைப்பாட்டையும் வலியுறுத்தி வந்தவர்.
எழுத்தாளர், இலக்கியவாதி, பதிப்பாளர் என்ற பல்வேறு தளங்களில் முன் நின்று செயலாற்றி வரும் புலவர் வைகறைவாணன் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்கவும் இளைய தலைமுறை அறிந்து கொண்டு பின்பற்ற வேண்டியது அவசியம் என்று நிகழ்ச்சியில் பேசியவர்கள் குறிப்பிட்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் புலவர் அரங்கராசன், முனைவர் பாரி, முனைவர் சுப்பிரமணி, பொறியாளர் ஜான் கென்னடி உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.