தஞ்சாவூர்: கோடை சாகுபடி பணிகள் செய்யப்பட்டு, தற்போது முழுவீச்சில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசு சார்பாக 193 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஆனால் பல்வேறு இடங்களில் குறைவான அளவே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. குறிப்பாக அன்னப்பன்பேட்டை பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லுடன் 20 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் சாலையோரங்களில், காத்து கிடைக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் தற்போது மாவட்டத்தில் இரவு நேரங்களில், மழை விட்டுவிட்டு பெய்வதால், நெல் மணிகள் அனைத்தும் முளைக்கத் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் வேதனை
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களில் இரவு, பகலாக 20 நாள்களுக்கு மேலாக காத்திருக்கிறோம்.
இதனால் நெல்லை காய வைப்பது, பாதுகாப்பது என கூடுதலாக ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. கொள்முதல் நிலையங்களில் 500 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.
நெல்மணிகள் மழையில் நனைவதால் முளைத்து வீணாக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 10 மூட்டை வரவேண்டிய இடத்தில் வெறும் ஐந்து மூட்டைகள் தான் வருகிறது. இதனால் போட்ட முதல் கூட தங்களுக்கு கிடைக்காது. நெல்லின் ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்வதை தாமதம் செய்கின்றனர்.
எனவே கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய வேண்டும். நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதம் வரை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்” எனக் கண்ணீருடன் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்!