தஞ்சாவூர்: திருவிடைமருதூர் அருகேயுள்ள திருபுவனம் காத்தாயி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த 9 வயது சிறுமி தீ காயமடைந்து சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் (60), சட்டப்பேரவை உறுப்பினர் கோவி.செழியனிடம் சொல்லி சிறுமிக்கு அரசிடம் இருந்து கல்வி உதவி தொகை, நிவாரணம் வாங்கி தருவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினரை பார்க்க செல்வதாக கூறி சிறுமியை மட்டும் இருசக்கரகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் யாரும் இல்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்து சென்று, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி கத்தியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியை அன்பழகன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் அன்பழகன் தன்னிடம் நடந்து கொண்டது குறித்து சிறுமி அவரது தாயிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்பழகனிடம் உறவினர்கள் கேட்ட போது கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிறுமியின் தாய் கும்பகோணத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனடிப்படையில் அன்பழகன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.