தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாநில அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. "அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு" எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனிதவள மேம்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு கருத்தரங்கினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
மேலும் ‘அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு’ எனும் நூலினையும் மற்றும் விழுப்புரம், வேலூர் மாவட்ட கல்வெட்டுகள் எனும் நூலினையும் வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சியில் பேசும்போது, "நம்முடைய பெருமைகளை எல்லாம் மண்ணில் இருந்து, விண்ணுக்குக் கொண்டு செல்லும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் காரணமாகத்தான், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "அன்பில் செப்பேடுகள் தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கியமானது. தமிழ்நாட்டில் அகழாய்வு 8 இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் வரலாறு சிந்து சமவெளி, கங்கை சமவெளியில் இருந்து எழுதப்படக் கூடிய வரலாறு அல்ல, அது காவிரி கரையில் இருந்து எழுதப்படக்கூடிய வரலாறு.
அவற்றை நிரூபிக்கக் கூடிய ஆய்வுகள் கீழடி நாகரிகம், வைகை நாகரிகம், பொருநை நாகரிகம், வெம்பக்கோட்டை வைப்பாற்று நாகரிகம், நம்பியாற்று கரையில் நடைபெறுகின்ற ஆய்வுகளாக இருந்தாலும், ஆய்வுகள் அத்தனையும் தமிழ்நாட்டின் வரலாற்றை எந்த அளவுக்கு பின்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்" என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "கீழடி அருங்காட்சியகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து பொருநையில் அருங்காட்சியகம், தஞ்சையில் ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் கங்கைகொண்ட சோழபுரத்திலும் அருங்காட்சியகம் விரைவில் துவங்க உள்ளது என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து ராஜராஜ சோழன் சிலை பெரிய கோயில் உள்ளே வைக்கப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஏற்கனவே அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், தற்போது தஞ்சை பெரிய கோயில் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன், மாகராட்சி மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: “அண்ணா குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது” - அண்ணாமலை பதில்!