தஞ்சாவூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கடந்த 12ஆம் தேதி தண்ணீரை திறந்து வைத்தார். இந்த தண்ணீர் தற்போது தஞ்சை மாவட்டம் கல்லணை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், கல்லணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் இன்று திறந்து விடப்பட்டது.
இந்த நிகழவில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பழநிமாணிக்கம் ஆகியோர் பங்கேற்று காவிரி ஆறு, வெண்ணாறு கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் மதகு பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைத்தனர்.
மேலும் நெல்மணிகள் மற்றும் மலர்களை தூவி தண்ணீரை வரவேற்றனர். இந்த தண்ணீர், கல்லணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 500 கன அடியும், வெண்ணாற்றில் 500 கன அடியும், கல்லணை கால்வாயில் 100 கன அடியும், கொள்ளிடத்தில் 500 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காவிரி பாசன பகுதிகளில் தண்ணீர் கடைமடை வரை சென்றடைந்தபின் உரியநீர் காரைக்கால் பாசன பகுதிக்கு பங்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,08,951 ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 92,214 ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22,805 ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93,750 ஏக்கர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 24,976 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி என மொத்தம் 3,42,696 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய இலக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பாண்டில் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகியவற்றில், ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் ரூபாய். 4600,00 லட்சம் மதிப்பில், சுமார் 3,147.11 கிலோமீட்டர் நீளத்திற்கு சிறப்பு திட்ட நிதியின் கீழ் தூர்வாரும் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து எதிர்நோக்கும் மழை மேலும் கர்நாடகாவில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படும். மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறை பாசனம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூரப்பட்டுள்ளது.
முன்னதாக இது குறித்து பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, "மேட்டூரில் உள்ள தண்ணீரால் தற்போது குறுவை சாகுபடி செய்ய முடியாது எனவும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர தமிழக முதல்வர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அது நடைபெறாத பட்சத்தில், ஜூலை மாதம் ஆயிரம் விவசாயிகளுடன் டெல்லி சென்று போராட்டம் நடத்துவோம்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சீனாவில் படிக்கச் சென்ற மாணவருக்கு நேர்ந்த சோகம்.. நடந்தது என்ன?