மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கோட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிற்கு உட்பட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி மாநில மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதாகவும், இதற்கு போலீசாரும் துணைபோவதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதனிடையே, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் தெரிவித்த பின்னரே மதுவிற்பனை செய்வதாக, சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர் ஒருவர் பேசிய வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைத்தொடர்ந்து, சட்டவிரோத மது விற்பனையில் சம்பந்தப்பட்ட சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் கவிதா என்பவரை, தஞ்சை சரக டி.ஐ.ஜி கயல்விழி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பொதுமக்கள் அளித்தப்புகாரின் மீது உரிய விசாரணை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுத்த டிஐஜிக்கு சீர்காழி பகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
மேலும் தஞ்சை காவல் சரகத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில், சட்டவிரோத மது விற்பனையில் யாரேனும் ஈடுபட்டாலோ அல்லது அதற்கு போலீசார் உடந்தை என்று தகவல் வந்தாலோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி., கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.