கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள பிரசித்திபெற்ற 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழா கொண்டாடப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாசி மகத்துடன் கூடிய பவுர்ணமி தினமான இன்று (மார்ச் 6), தீர்த்தவாரி நடந்தது. ஆதி கும்பேஸ்வரர், திருக்கோட்டீஸ்வரர், அமிர்தகலச நாதர், நாகேஸ்வரர், பாணிபுரீஸ்வரர் உள்ளிட்டோர் தனித்தனி ரிஷப வாகனங்களில் மகா மக குளத்தில்எழுந்தருளினர். பின்னர் அஸ்திர தேவருக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம் ஆகிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அஸ்திர தேவருடன் மகாமக குளத்தில் சிவாச்சாரியார் மூழ்கி எழ, மகா தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மகா மக குளத்தில் புனித நீராடியதுடன், சாமி தரிசனம் செய்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கும்பகோணத்தில் பக்தர்கள் குவிந்துள்ளதால், டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குளத்துக்குள் இரண்டு ஃபைபர் படகுகள், மீட்பு வாகனத்துடன் தீயணைப்புத்துறை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
கும்பகோணத்தில் கடைசியாக 2016-ம் ஆண்டு மகாமக பெருவிழா நடைபெற்ற நிலையில், அடுத்த மகா மகம் 2028ம் ஆண்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திதி கொடுக்க வந்தவர் மாரடைப்பால் மரணம்.. பேரூர் கோயில் நடை அடைப்பு!