காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார். அதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகள் தொடர்பான சிறப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு குறுவை நெல் சாகுபடிக்கு தேவைப்படும் விதைகள், உரங்கள், வேளாண் இயந்திரங்கள், இதர இடுப்பொருட்கள், இருப்பு, விநியோகம், தடையில்லா மும்முனை மின்சாரம், குடிமராமத்து பணிகள், விவசாய கடன் அட்டை மூலம் பயிர் கடன் உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இந்தாண்டு நெல் குறுவை சாகுபடி இலக்காக 43,225 ஹெக்டர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 13,480 ஹெக்டர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான விதைகள் தற்போது வரை 183 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 270 மெட்ரிக் டன் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள் போதுமான அளவு அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், தனியார் உரம் விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைத்திட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும் குறுவை சாகுபடிக்காக தூர்வாரும் பணிகளை ஜூன் 10ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர், கூட்டுறவு சங்களின் இணைப் பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அமராவதி ஆற்று தண்ணீர் தாராபுரம் வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி!