தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் விக்கி என்ற பாலமுருகன். இவர் செப்.24 ஆம் தேதி தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
அதன் பின் விக்கி தனது நண்பர்களுக்கு மதுபான விருந்து அளித்துள்ளார். இந்த விருந்தில் அதே பகுதியை சேர்ந்த கோபி என்ற புண்ணியமூர்த்தி, சரவணன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அப்போது புண்ணியமூர்த்திக்கும் சரவணனுக்கும் மதுபோதையில் வாய் தகராறு ஏற்பட்டது. இறுதியில் கைகலப்பானது. இதைப்பார்த்த மற்றவர்கள் இருவரையும் சமாதனப்படுத்தி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் புண்ணியமூர்த்தி தனது வீட்டில் வெளியில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும்போது ஆத்திரத்தில் இருந்த சரவணன் தூங்கிக்கொண்டிருந்த புண்ணியமூர்த்தி நெஞ்சில் கத்தியால் குத்தினார்.
இதில் சம்பவ இடத்திலேயே புண்ணியமூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் பட்டுக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் புண்ணியமூர்த்தி உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சரவணன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மதுபோதையில் இருந்த புண்ணியமூர்த்தி தனது தாயாரை தரக்குறைவாக பேசியதால் கொலை செய்ததாக சரவணன் தெரிவித்தார்.