தஞ்சாவூர்: கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று (செப்.6) பகவான் ஸ்ரீ கண்ணன் கோயிலில் உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பகவானை வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மேலவீதி தேரடி பகுதியில், பகவான் ஸ்ரீ யாதவ கண்ணன் கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், பகவான் ஸ்ரீ யாதவ கண்ணன் கோயிலின் 23வது கிருஷ்ண ஜெயந்தி விழாவினை முன்னிட்டு, ‘கோகுலாஷ்டமி யாதவ கண்ணனின் உறியடி திருவிழா’ கடந்த (செப்.3) ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், நேற்று(செப்.6) கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பகவான் ஸ்ரீ யாதவ கண்ணன் கோயிலில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட யாதவ கண்ணன் உருவப் படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கண்ணனுக்கு பிடித்தமான சீடை, முறுக்கு, அவல், வெண்ணெய், சுண்டல் ஆகியவை படையலிட்டு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மஹாதீபாராதனையும் நடைபெற்றது.
இதையும் படிங்க: krishna jayanthi :ஸ்ரீ காளிங்க நர்த்தன ஆலயத்தில் 102 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா.. ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து குழந்தைகள் உலா
அதனைத்தொடர்ந்து, விழாவில் பரதநாட்டிய நிகழ்ச்சி, பூச்சொரிதல் விழா, 50க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வஸ்திரங்கள் சாத்தி, கோ பூஜை வழிபாடு ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் கலந்துகொண்டு பக்தி பாடல்களை பாடினார். மேலும், மைதிலிசேகர் ருக்மணி திருக்கல்யாணம் கதாகாலட்சேபம் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, விழாவில் வழுக்கு மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு உறியடி திருவிழா தொடங்கியது. அதில், எண்ணெய் தடவப்பட்ட சுமார் 25 அடி உயர வழுக்கு மரத்தில் இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஏறி உச்சியில் வைக்கப்பட்டிருந்த பரிசு பொருளை எடுத்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
அதனைத் தொடர்ந்து பகவான் ஸ்ரீ யாதவ கண்ணனுக்கு நெய்வேத்தியம் படைக்கப்பட்டு, விஷ்ணம்பேட்டை குழுவினரின் ஹரிபஜன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ யாதவ கண்ணனை வழிபாடு செய்தனர். மேலும், நிகழ்ச்சியில் குழந்தைகள் வண்ண வண்ண உடைகளில் ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து கோயிலுக்கு வருகை புரிந்து பகவானை வழிபாடு செய்து ஹரிபஜன் பாடலை கேட்டு நடனமாடினர்.
இந்நிகழ்ச்சியில், விழா குழு தலைவர் கோபால், உறியடி குழு செயலாளர் சரத்யாதவ், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற விழாவானது இனிதே நிறைவு பெற்றது.
இதையும் படிங்க: பல்லடம் கொலை வழக்கு: வெங்கடேசன் சுட்டுப்பிடிப்பு... மவுனம் காக்கும் போலீசார்.. காரணம் என்ன?