தஞ்சாவூர்: பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கடந்த வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்கவரும் கொலு பொம்மைகள் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை. தமிழ்நாட்டில் இவ்விழா நவராத்திரி என்ற பெயரிலும், கர்நாடக மாநிலத்தில் தசரா என்றும் குஜராத்தில் தாண்டியா என்ற பெயரிலும் மேற்கு வங்கம் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளிலும் துர்கா பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகம் கைவினை கலைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் பொருட்டு ஆண்டுதோறும் தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையை நடத்தி வருகிறது.
இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப், பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சக்திதேவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் கொலுப்படி செட், கிரகப்பிரவேச செட், வேதமூர்த்திகள், அஷ்ட பைரவர்கள், விநாயகர் செட், திருமலை செட், கோபியர் செட், கிரிக்கெட் விளையாட்டு செட், சங்கீத மும்மூர்த்திகள் செட், நவகிரகங்கள், அத்தி வரதர் நின்ற கோலம், தசாவதாரம் செட் இடம் பெற்றுள்ளன.
புது வரவு: அஷ்டலட்சுமி செட், தர்பார் செட், மைசூர் தசரா செட், குபேரன் செட், கிரிவலம் செட், கருட சேவை செட், வைகுண்டம் செட், அஷ்ட வராஹி செட், நவதுர்க்கை செட், பூதகணங்கள், கிருஷ்ணர் விளையாட்டு போன்ற கொலு பொம்மைகளும், ராஜஸ்தான், கொல்கத்தா, புனே, புதுடெல்லி போன்ற பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பொம்மைகளும் இக்கண்காட்சி மற்றும் விற்பனையில் இடம் பெற்றுள்ளன.
குட்டீஸ் கொலு பொம்மைகள்: குழந்தைகளுக்கான கார்டூன் சித்திர பொம்மைகள், களிமண், காகித கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் பொம்மைகள், சென்னப்பட்டினா மர பொம்மைகள், ஒட்டிகோப்பா பொம்மைகள், போன்ற பல வகை கைவினைப் பொருட்களினால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10% சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சி மூலம் ரூ 40 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கண்காட்சி மற்றும் விற்பனை வரும் அக்டோபர் 25ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர். நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளில் கொலு வைத்தும் மற்றும் கோயில்களிலும் கொலு வைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொண்டாடி மகிழ்வர், நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மரப்பாச்சி பொம்மை முதல் விக்ரம் லேண்டர் வரை…கோவை பூம்புகாரில் கண் கவரும் கொலு பொம்மை கண்காட்சி