தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உலகப் புகழ் பெற்ற பெருவுடையார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கட்டடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. மேலும் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டு பாரம்பரியச் சின்னங்களாக மத்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில், தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சரின் உத்தரவுப்படி 2023 - 2024ஆம் ஆண்டில் மாமன்னன் ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் தஞ்சாவூரில் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஏற்கனவே அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து வைத்திருந்தனர். இந்த நிலையில், தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் தஞ்சையில் அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அதிகாரிகளிடம் அருங்காட்சியகம் வந்து செல்வதற்கான வழி மற்றும் வசதிகள் ஆகியவற்றை அமைச்சர் சாமிநாதன் கேட்டறிந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், “தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் அருகில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த இடத்தில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் கோடை விழா தொடக்கம்; 350க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்பு!
அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு, மாற்று இடங்கள் வழங்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெறும். மற்ற நாடுகளுக்கு முன் மாதிரியாக இருக்கக் கூடிய அளவில் ராஜராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும், காட்சி ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது இல்லை என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரத்தில் உள்ளது. இதுவரை அச்சு ஊடகத்திற்கு மட்டும்தான் அதற்கான சட்டத்தின் அடிப்படையில் வழிவகை உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட காட்சி ஊடகம், சமூக வலைதளம், யூடியூப் போன்றவற்றிற்கு முறையான சட்ட முன்மாதிரிகள் உருவாக்கப்படவில்லை.
மத்திய அரசின் முடிவைப் பொறுத்துதான் மாநில அரசு வழிநடத்தும்” என கூறினார். இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன் (திருவையாறு), நீலமேகம் (தஞ்சாவூர்), கூடுதல் ஆட்சியர் சுகபுத்திரா, மாநகராட்சி மேயர் ராமநாதன் மற்றும் துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் பெரியகோயில் வாராஹி அம்மனுக்கு தேங்காய் பூ அலங்காரம்