தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, அமைச்சர்கள் துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ். மணியன் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் , கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்றடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தேவையான நேரத்தில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் வழங்கப்படும்.
தற்போது நாற்று நடும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருவதால், அதிகளவு தண்ணீர் தேவைப்படாது. நடவு செய்தபின் தான் அதிக அளவு தண்ணீர் தேவைப்படும்.
விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடியை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொடுக்கும்.
மேலும், உபரி நீர் கொள்ளிடத்தில் இருந்து வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் ரூ.436 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன, என்றார்.