தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள கொற்கை கிராமத்தில் பல நூறு ஆண்டுகள் பழமையான புஷ்பவள்ளி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் அவிட்ட நட்சத்திரத்திற்குரிய பரிகாரத்தலமாகவும், கோரக்க சித்தர் வழிபட்டதலமாகவும், விளங்குகிறது. இக்கோயிலுக்கு இன்று (நவ.3) ஜப்பானிய குழுவினர் வருகை தந்தனர்.
ஜப்பான் நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழி குறித்தும், சித்தர்கள் குறித்து மரக்காணத்தைச்சேர்ந்த கோபால் பிள்ளை சுப்பிரமணியன் என்பவரின் தலைமையிலான தக்கா யுகி ஹொசி (எ) பால கும்ப குருமுனி உள்ளிட்ட 15 பேர் கொண்ட ஜப்பானியர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும், சித்தர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி, தமிழ் மீதும் கொண்ட பற்று, தமிழ்க்கடவுள்கள், தமிழர் கலை, பண்பாடு, கலாசாரம் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக இத்தலத்தில் சிவாச்சாரியார்கள் கொண்டு சிறப்பு யாகம் வளர்த்து, மூலவர் புஷ்பவள்ளி சமேத பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தனர். இவர்கள் அனைவரும் உலகில் தோன்றிய முதல் மொழி 'தமிழ்', உலகின் முதல் கடவுள் முருகன், சிவன் மற்றும் சித்தர்களின் முதன்மையானவர், அகத்தியர் என்றும் நம்பிக்கைக் கொண்டு இந்த வழிபாடு மேற்கொண்டனர்.
தொடர்ந்து இக்குழுவினர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலைக்கும், சைவத்தலமான திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட கோயில்களுக்கும் சென்று வழிபட திட்டமிட்டுள்ளனர். இதில் 'பால கும்ப குருமுனி, வணக்கம்.. நன்றி..' என தமிழில் சொன்னது மட்டுமல்லாது, தமிழ்க்கடவுள்களான முருகனுக்கு, சிவனுக்குரிய மந்திரங்களை தமிழில் கூறியும் அசத்தினர்.
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கோபால் பிள்ளை சுப்பிரமணியன் தலைமையில், ஜப்பான் நாட்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுபோல, தமிழ் மீதும் தமிழ்க்கடவுள்கள் மீதும் பற்றுகொண்டதோடு, இவ்வாறு அவ்வப்போது தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பல கோயில்கள், சித்தர்களின் சமாதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு வழிபாடு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குமரி to ஜோத்பூர்: விமானத்தில் சென்ற சினேரியஸ் கழுகு - வழிதவறிய கழுகிற்கு அரசு செய்த பெரும் உதவி!