தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நேற்று(ஆகஸ்ட் 5) ஜெய்பீம் 2.0 நிகழ்வில், அம்பேத்கரிய தூதுவர் சான்றிதழ் வழங்கும் விழா ஜெய்பீம் பவுண்டேஷன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் தலைமையிலும், அம்பேத்கரியம் 50ன் தொகுப்பாசிரியரும், ஜெய்பீம் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் கௌதம சன்னா முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மணிவிழாவை முன்னிட்டு, ஜெய்பீம் 2.0 அறக்கட்டளை வாயிலாக, அம்பேத்கருக்கு நன்றி செலுத்தும் வகையில், ரூபாய் 12 ஆயிரம் செலுத்தினால், ஒரு கிராமத்தில், அவர் அம்பேத்கர் நூலுகம் அமைக்க காரணமாக அமைவதால், அவர் அம்பேத்கரிய தூதுவராகவும், 3 கிராமங்களில் நூலகம் அமைய ஏற்போருக்கு வெள்ளி தூதுவராகவும், 5 கிராமங்களை ஏற்போருக்கு தங்கத் தூதுவராகவும், 10 கிராமங்களை ஏற்போருக்கு வைரத் தூதுவராகவும் அங்கீகரித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், ''இந்தியாவின் முதல் குடிமகளாக போற்றப்படும் குடியரசுத் தலைவரை வைத்து, புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை நடத்தாவிட்டாலும் கூட, அவரை விழாவிற்கு அழைக்கவில்லை. இந்நிகழ்வுக்கு, அவர் பழங்குடியின பெண் என்பதும், கணவரை இழந்தவர் என்பதும் தான் காரணம். ஒரு அரசே இத்தகைய ஜனநாயக விரோதமான செயலைச் செய்வதை வைத்து ஒரு நாடு எப்படி இருக்கிறது? என்பதை உணரலாம்'' எனக் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, தூதுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, தொல் திருமாவளன் சிறப்புரையாற்றி பேசுகையில், ''எனக்கு கும்பகோணம் உள்ளிட்ட 2 நிகழ்ச்சிகள் தான் இன்று திட்டமிட்டிருந்த போதும், ஒப்புக்கொள்ளாத 10 , 15 நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் தான் இந்த பல மணி நேரம் தாமதம். அதற்காக வருத்தப்படுகிறேன். இடஒதுக்கீடு மூலம் ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சேர்ந்து ஆண்டிற்கு சுமார் 12 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டும் நபர்கள் அதில் ஒரு சதவீதமான ரூபாய் 12 ஆயிரத்தை ஜெய்பீம் 2.0 அறக்கட்டளைக்கு அளிப்பதன் வாயிலாக, ஒரு கிராமத்தில் அம்பேத்கரியம் குறித்து நூலகம் அமைக்க வாய்ப்பு கிட்டும். இப்படி அளிக்கும் தொகை என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கோ, அல்லது ஜெய்பீம் 2.0 அறக்கட்டளைக்கோ ஆனது அல்ல, அம்பேத்கருக்கு செலுத்தும் நன்றி காணிக்கையாகும்'' என்று குறிப்பிட்டார்.
''முதற்கட்டமாக இதற்காக 6 ஆயிரம் அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு 6 ஆயிரம் கிராமங்களில் இத்தகைய நூலகம் அமைக்கப்படவுள்ளது. மேலும், மணி விழாவையொட்டி என்ன சாதித்தோம்? என திரும்பிப் பார்த்தால் 6 ஆயிரம் கிராமங்களில் படிப்பகங்களை கட்டி முடித்தோம் என்பது சாதனையாக அமையும்'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க:பாதியில் நிற்கும் பாதயாத்திரை.. அண்ணாமலை நாளை டெல்லிக்கு திடீர் பயணம்.. காரணம் என்ன..?