தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் இந்தியன் வங்கிக்கு இஸ்லாமியர்கள் ஒட்டுமொத்தமாக சென்று பணம் எடுக்க இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து ஏராளமான காவல் துறையினர் வங்கி முன்பு குவிக்கப்பட்டனர்.
300க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வங்கிக்குச் சென்று பணம் எடுக்க முயன்றனர். ஆனால், காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வங்கி பூட்டப்பட்டு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இஸ்லாமியர்கள் வெயிலின் தாக்கத்தை பொருட்படுத்தாமல் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக வங்கி முன்பு அமர்ந்து வங்கியைக் கண்டித்தும் வங்கி மேலாளரைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் காவல் துறையினர், வங்கி மேலாளர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.