தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்(43). விவசாயியான இவர் ஐ.டி.ஐ தொழிற்பயிற்சிக்கான படிப்பு படித்துள்ளார். சமீபகாலமாக நாற்று நடுவதற்கு வேலை ஆட்கள் கிடைக்காமலேயே இருந்துவந்தது. இதனை தவிர்க்கவும், நாற்றாங்காலில் பயிரிட்டு 30 நாட்களுக்கு பிறகு அந்த நாற்றை பறித்து நடவு செய்வதால் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்கவும் புதிய முறையை கண்டுபிடிக்க வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்து வந்தார். அதன் பயனாக தனது வீட்டில் உள்ள மோட்டார், தட்டு ஆகியவைற்றை பயன்படுத்தி பேப்பர் மூலம் நடவு செய்வதற்கான புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
ஒரு ஏக்கருக்கு 45 கிலோ வரையிலான விதை நெல், அதனை நடவு செய்ய 10 முதல் 15 நாட்கள் வரை தேவைப்படுகிறது. எனவே இந்த இயந்திரத்தின் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு வெறும் 3 முதல் 5 கிலோ விதை நெல் மற்றும் இரண்டு ஆட்கள் இருந்தாலே போதும் இப்பணியைச் செய்து முடித்துவிடலாம். மேலும், இவ்விரண்டு முறைக்கும் ஒரே லாபம்தான். இவ்வியந்திரம் மூலம் ஆட்கள் பற்றாக்குறை, கால விரயம் என பல்வேறு சிரமங்களை தவிர்க்கலாம் என கூறுகிறார் ரமேஷ்
இந்த யோசனை எவ்வாறு வந்தது என்று கேட்ட பொழுது, அவர் " நண்பர் ஒருவர் மாத்திரை மூலம் நெல் விவசாயம் செய்யும் முறையை அறிமுகபடுத்தி வைத்தார். பின்னர் அதை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தேன். ஆனால் அதற்கு கூடுதலான செலவு ஆனதோடு விளைச்சலும் பெரிதாக இல்லை.
எனவே, அதற்கு மாற்றாக நாமே ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்தேன். பின்னர் ஓராண்டு கடும் முயற்சிக்கு பிறகு இந்த கருவியை கண்டுபிடித்தேன்.
இதில் 100 மீட்டர் நீளம், இரண்டே கால் இஞ்ச் அகலம் கொண்ட பேப்பர் ரோலை பொறுத்திவிட வேண்டும். மேலே பொறுத்தப்பட்ட தட்டுக்கள் இடையே பருத்திக்கொட்டை உரம், விதை நெல்களை கொட்டவேண்டும். அதன்பின் மோட்டாரை ஆன் செய்தால் போதும்.
பேப்பர் ரோல் நகன்று 5 இஞ்ச் இடைவெளியில் விதை நெல்கள் விழுந்து கொண்டே இருக்கும். பேப்பர் ரோலின் நடு பகுதியில் விதை நெல் இருக்கும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உழவு செய்யப்பட்டிருக்கும் வயலுக்கு எடுத்து சென்று நடவு பணியை தொடங்கலாம்.
அதாவது ஒரு நபர் இருந்தால் போதும் விதை நெல் நிரப்பப்பட்ட பேப்பர் ரோலின் ஒரு முனையை நடவு இயந்திரத்தில் வைத்து நடவு செய்யலாம். அதன் பின் வழக்கம் போல் செய்யும் பணிகளை தொடர வேண்டும். இந்த கருவியையும், முறையையும் கண்டு பிடிப்பதற்கு நான் பல நாட்கள் இரவு பகல் பாறாமல் உழைத்திருக்கிறேன்.
எப்போதும் போல் நடவு நட்டால் ஒரு ஏக்கருக்கு 14,000 வரை செலவாகும், ஆனால் இந்த இயந்திரத்தை பயன்படுத்தினால் 8,000 ரூபாய் மட்டுமே செலவாகும். என்னிடம் பலர் நடவு செய்து கொடுங்கள் என கேட்கிறார்கள், அவர்களிடம் 4000 ரூபாய் வாங்கிக் கொண்டு இதனை செய்து கொடுக்கிறேன். என்னிடம் உள்ள பொருளாதாரத்தின் அடிப்படையில் இதை எளிய முறையில் உருவாக்கியுள்ளேன். அரசாங்கம் என்னை ஊக்குவித்து நிதி உதவி செய்தால் இதை இன்னும் நல்ல முறையில் விரிவு படுத்துவதோடு விவசாயிகள் பயன் பெறும் வகையில் சொல்லி தருவதற்கும் தயாராக உள்ளேன்" என்றார்.