தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 26ஆம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாவட்ட காவல் எஸ்பி ஆஷிஸ் ராவத் உத்தரவிட்டு, ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசின் ஆணைப்படி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தஞ்சாவூர் மாநகர போக்குவரத்து போலீசார் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த செல்வம் என்ற வாலிபர் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் திடீரென சாலையில் நடுவில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உடனடியாக அங்கு வந்து வாலிபரிடம் ஹெல்மெட் அணியாமல் வந்தது தவறு என்றும், மேலும் பஸ் மறியலில் ஈடுபட்டது குற்றம் என்றும் தெரிவித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
பின்னர் அங்கு வந்த போலீசார் அவரது இருசக்கர வாகனத்தையும் அவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூரில் கடந்த நான்கு நாட்களாக ஹெல்மட் அணியாமல் சென்ற சுமார் 2,000 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.