தஞ்சாவூரில் பா.ஜ.க. மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான இல.கணேசன்,செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், "தண்ணீரில் மூழ்கிறவனை தலை முடியை பிடித்து இழுப்பது போல் காங்கிரஸ் கட்சி கமல் ஹாசனை கூட்டணிக்கு அழைப்பது நகைப்பாக உள்ளது. புதுச்சேரியில் ஜெகத்ரட்சகனை முதலமைச்சர் வேட்பாளராக திமுக அறிவித்துள்ளது, திமுக-காங்கிரஸ் கூட்டணியை முறிப்பதற்கான முன்னோட்டம் எனவும் திமுக காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்டால் நாட்டுக்கு நல்லது.
தண்டனை காலம் முடிந்து சசிகலா வெளியே வருவதை சிலர் சிங்கம், புலி கூண்டிலிருந்து வெளியே வருவதை போல் கூறுகின்றனர். அவர் பின்னணியில் ஆயிரம் இருந்தாலும் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இருந்த நட்பு ஈடு செய்ய முடியாத சிறப்பானது என்பதை அனைவரும் அறிவார்கள்.
அதிமுகவும் இரட்டை இலை சின்னமும் ஜெயலலிதாவின் நினைவாக உள்ளது. அதிமுகவுக்கும் இரட்டை இலைக்கும் துரோகம் செய்வது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்பது சசிகலாவுக்கும் தெரியும். எனவே, அவர் துரோகம் செய்வார் என்று ஏன் நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பது பொருத்தமாக இருக்காது சசிகலா வெளியே வரட்டும் அதற்கு பிறகு பார்ப்போம்" என்றார்