தஞ்சாவூர்: தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில், காசிநாதன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை (டிச.16) இவருடைய உணவகத்திற்கு சாப்பிட வந்தவர், அவர் கொண்டு வந்த பையை உணவகத்திலேயே வைத்து விட்டுச் சென்றுள்ளார். இதனை அறிந்த உணவக உரிமையாளர், அந்த பையை திறந்து பார்த்த நிலையில், அதில் கட்டு கட்டாக பணம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து, அவர் தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவைச் செயலாளர் ரவி மூலமாக, தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் உணவகத்திற்கு வந்த போலீசாரிடம், உணவகத்தின் உரிமையாலர் பையை ஒப்படைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து, போலீசார் அந்தப் பையை திறந்து பார்த்ததில், அதில் ரூ.4 லட்சம் மற்றும் 500 கிராம் எடையுள்ள வெள்ளிக் கட்டிகள் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், அந்தப் பையில் ஒரு செல்போன் நம்பர் எழுதப்பட்டு இருந்துள்ளது.
இதனால் போலீசார் அந்தப் பையில் இருந்த செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, உணவகத்தில் பையை தவற விட்டுச் சென்றவர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த கோட்டூர் வடக்கு தெருவைச் சேர்ந்த நகைக்கடை நடத்தி வரும் கணேஷ் என்பது தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பணத்தின் உரிமையாளர் கணேஷ், தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அவரிடம் தஞ்சை மாவட்ட போலீஸ் எஸ்பி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் நசீர், சப்-இன்ஸ்பெக்டர் சசிரேகா மற்றும் தஞ்சை மாவட்ட வணிகர் சங்கப் பேரவைச் செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலையில், உணவகத்தின் உரிமையாளர் காசிநாதன் ரூ.4 லட்சம் மற்றும் 45 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகளை, அதன் உரிமையாளர் கணேஷிடம் ஒப்படைத்தார்.
இதனையடுத்து, தவற விட்ட பொருளை சரியாக ஒப்படைத்த உணவகத்தின் உரிமையாளர் காசிநாதனின் நேர்மையைப் பாராட்டி, தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசார் அவருக்கு பொன்னாடை அணிவித்தனர். மேலும், பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை தன்னிடம் திரும்ப ஒப்படைத்த காசிநாதன் மற்றும் மருத்துவக் கல்லூரி போலீசாருக்கு கணேஷ் நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி; பகல் பத்து ஐந்தாம் நாளில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்!