தஞ்சாவூர்: கும்பகோணம், ஸ்ரீநகர் காலனி, தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் எம்.ஆர். கணேஷ், எம்.ஆர். சுவாமிநாதன்.
இவர்களிடம் சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்று உள்ளது. ஆகையால் இவர்களை அப்பகுதி மக்கள் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என்று அழைத்தனர்.
இவர்களில் கணேஷ் பாஜக வர்த்தகப்பிரிவில் பொறுப்பு வகித்தவர். இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கும்பகோணம் குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் உள்பட நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ரகுநாதன், மீரா, ஸ்ரீதர் உள்ளிட்டோர் மீதும் 120பி, 406, 420 ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சகோதரர்களையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றிய ஸ்ரீகாந்தன் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று முன்தினம் (ஜூலை 21) காலை கைதுசெய்தனர்.
இந்நிலையில் திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் தனிப்படை பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் தலைமையிலான காவல் துறையினர் ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வீட்டிலிருந்த 12 சொகுசு கார்களை பறிமுதல்செய்து தஞ்சை மாவட்ட குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: 'நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை?'