தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் இருதயராஜ் - ஜாய்லின் தம்பதி. இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆவர். இவர்களது மகள் மார்ட்டினா ஜாய்ஸ் (24), தஞ்சையில் உள்ள பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எம்.பி.ஏ மார்க்கெட்டிங் துறையில் கல்வி பயின்று வந்துள்ளார்.
இதையடுத்து நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் வெற்றி பெற்று, தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். இதன் காரணமாக அவருக்கு தங்கப் பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்த பதக்கத்தினை நேற்று (ஜன.2) திருச்சியில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக 38வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடியின் கையால் பெற்றுள்ளார். இது குறித்து எம்.பி.ஏபட்டதாரி மார்ட்டினா ஜாய்ஸ் கூறுகையில், “தான் படித்த கல்லூரியின் நோக்கம், வேலை தேடுபவனாக இருக்காதே, வேலை அளிப்பவனாக இரு என்பதுதான்.
அந்த நோக்கத்தின்படி கல்வி பயின்றேன், அதுதான் தன்னை பிற்காலத்தில் தொழில் முனைவராக ஆக்குவதற்கு ஊக்கத்தை அளித்தது. கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள், எனக்கு நிறைய உதவிகளைச் செய்தார்கள். அவர்கள் கற்றுத் தரும் பாடங்களை உள்வாங்கிப் படித்ததன் மூலம், தரவரிசைப் பட்டியலுக்கு வர முடிந்தது. பிரதமர் மோடியின் கையால் பட்டம் மற்றும் தங்கப்பதக்கம் வாங்கியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.
எம்.பி.ஏ மார்கெட்டிங் சிறப்பு பிரிவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங், சோசியல் மீடியா ஆகிய புதிய தொழில் நுட்பங்கள் உருவாகி வருகிறது. இதில் நிறைய வாய்ப்பு உள்ளது, இது நாம் வேலை செய்யும் நிறுவனத்திற்கும் மிகவும் பயன்படும். இந்தியா டிஜிட்டல் இந்தியாவாக மாறி வருகிறது, இந்த நேரத்தில் எஸ்இஓ, டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயன் கொடுக்கும். இந்த நேரத்தில் எனது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறோன்” என்றார்.
மேலும் இது குறித்து கல்லூரி செயலாளர் புனிதா கணேசன் கூறுகையில், “மாணவி மார்ட்டினா ஜாய்ஸ் தங்கப்பதக்கம் வென்று, அதை பிரதமர் மோடியின் கையால் வாங்கியுள்ளார். இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது, அதேபோல் மாணவி பதக்கம் பெற்றது மட்டுமல்லாமல், கல்லூரியின் நோக்கத்தையும் நிறைவேற்றி உள்ளார்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக தங்கப்பதக்கம் மற்றும் பட்டம் பெற்ற கல்லூரி மாணவிக்கு, கல்லூரி செயலாளர் புனிதகணேசன் உள்ளிட்ட பேராசிரியர்கள் சால்வை அணிவித்து, தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது கல்லூரி மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரண மாத்திரைகள் வழங்கக்கூடாது.. சென்னை காவல்துறை எச்சரிக்கை!